பத்துப்பாட்டு நூல்கள்

Thursday, December 22, 2005

பத்துப்பாட்டு நூல்கள் - சிறுபாண் ஆற்றுப்படை

ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய சிறுபாண் ஆற்றுப்படை

வேனிற்காலம்
மணி மலைப் பணைத் தோள் மா நில மடந்தை
அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல,
செல்புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று,
கொல்கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த
புதுப் பூஞ் செம்மல் சூடி, புடை நெறித்து, 5
கதுப்பு விரித்தன்ன காழ் அக நுணங்கு அறல்
அயில் உருப்பனைய ஆகி, ஐது நடந்து,
வெயில் உருப்புற்ற வெம் பரல் கிழிப்ப,
வேனில் நின்ற வெம் பத வழி நாள்
காலை ஞாயிற்றுக் கதிர் கடாவுறுப்ப, 10
பாலை நின்ற பாலை நெடு வழிச்
சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ
அழகு மிக்க விறலியருடன் இளைப்பாறும் இரவலன்
ஐது வீழ் இகு பெயல் அழுகு கொண்டு, அருளி,
நெய் கனிந்து இருளிய கதுப்பின்; கதுப்பு என,
மணிவயின் கலாபம், பரப்பி, பல உடன் 15
மயில், மயிற் குளிக்கும் சாயல்; சாஅய்
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ,
வயங்கு இழை உலறிய அடியின்; அடி தொடர்ந்து,
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடித் தடக் கையின்,
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின், குறங்கு என. 20
மால் வரை ஒழுகிய வாழை; வாழைப்
பூ எனப் பொலிந்த ஓதி; ஓதி,
நளிச் சினை வேங்கை நாள்மலர் நச்சி,
களிச் சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து,
யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளி, 25
பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை; முலை என,
வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின்
இன் சேறு இகுதரும் எயிற்றின்; எயிறு என,
குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின்; மெல் இயல்; 30
மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர்
நடை மெலிந்து அசைஇய நல் மென் சீறடி
கல்லா இளையர் மெல்லத் தைவர,
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்
இன் குரல் சீறியாழ் இடவயின் தழீஇ, 35
நைவளம் பழுநிய நயம் தெரி பாலை
கை வல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க,
இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ,
துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப,
முனிவு இகந்திருந்த முது வாய் இரவல! 40
வஞ்சி மாநகரின் சிறப்பு
கொழு மீன் குறைய ஒதுங்கி, வள் இதழ்க்
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை
பைங் கறி நிவந்த பலவின் நீழல்,
மஞ்சள் மெல் இலை மயிர்ப் புறம் தைவர,
விளையா இளங்கள் நாற, மெல்குபு பெயரா, 45
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும்
குட புலம் காவலர் மருமான் ஒன்னார்
வட புல இமயத்து, வாங்கு வில் பொறித்த
எழு உறழ் திணி தோள், இயல் தேர்க் குட்டுவன்
வரு புனல் வாயில் வஞ்சியும் வறிதே அதாஅன்று. 50
தமிழ் நிலை பெற்ற மதுரையின் மாண்பு
நறவு வாய் உறைக்கும் நாக முதிர் நுணவத்து
அறை வாய்க் குறுந் துணி அயில் உளி பொருத
கை புனை செப்பம் கடைந்த மார்பில்,
செய் பூங் கண்ணி செவிமுதல் திருத்தி,
நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த 55
மகாஅர் அன்ன மந்தி, மடவோர்
நகாஅர் அன்ன, நளி நீர் முத்தம்
வாள் வாய் எருந்தின் வயிற்றகத்து அடக்கி,
தோள் புறம் மறைக்கும், நல் கூர் நுசும்பின்,
உளர் இயல் ஜம்பால் உமட்டியர் ஈன்ற 60
கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும்
தத்து நீர் வரைப்பின் கொற்கைக் கோமான்;
தென் புலம் காவலர் மருமான்; ஒன்னார்
மண் மாறு கொண்ட, மாலை வெண் குடை,
கண் ஆர் கண்ணி, கடுந் தேர்ச் செழியன்; 65
தமிழ் நிலைபெற்ற, தாங்கு அரு மரபின்
மகிழ் நனை, மறுகின் மதுரையும் வறிதே; அதாஅன்று,
உறந்தையின் சிறப்பு
நறு நீர்ப் பொய்கை அடைகரை நிவந்த
துறு நீர்க் கடம்பின் துணை ஆர் கோதை,
ஓவத்து அன்ன உண்துறை மருங்கில் 70
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின்,
வரு முலை அன்ன வண் முகை உடைந்து,
திரு முகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை,
ஆசு இல் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன
சேயிதழ் பொதிந்த செம் பொன் கொட்டை, 75
ஏம இன் துணை தழீஇ, இறகு உளர்ந்து,
காமரு தும்பி காமரம் செப்பும்
தண் பணை தழீஇய தளரா இருக்கைக்
குண புலம் காவலர் மருமான் ஒன்னார்
ஓங்கு எயில் கதவம் உருமுச் சுவல் சொறியும் 80
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை,
நாடா நல் இசை, நல் தேர்ச் செம்பியன்
ஓடாப் பூட்கை உறந்தையும் வறிதே அதாஅன்று,
ஏழு வள்ளல்களின் சிறப்பு
பேகன்
வானம் வாய்த்த வள மலைக் கவா அன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய 85
அருந் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்,
பெருங்கல் நாடன், பேகனும்; சுரும்பு உண
பாரி
நறு வீ உறைக்கும் நாக நெடு வழிச்
சிறு வீ முல்லைக்குப் பெருந் தேர் நல்கிய,
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல் 90
பறம்பின் கோமான், பாரியும்; கறங்கு மணி
காரி
வால் உளைப் புரவியொடு வையகம், மருள,
வீர நல் மொழி, இரவலர்க்கு ஈந்த,
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சு வரு நெடு வேல்,
கழல் தொடித் தடக் கை, காரியும்; நிழல் திகழ் 95
ஆய்
நீலம், நாகம் நல்கிய, கலிங்கம்
ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த,
சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள்,
ஆர்வ நன் மொழி, ஆயும்; மால் வரைக்
அதிகன்
கமழ் பூஞ் சாரல் கவினிய நெல்லி 100
அமிழ்து விளை தீம் கனி ஒளவைக்கு ஈந்த,
உரவுச் சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல்,
அரவக் கடல் தானை, அதிகனும்; கரவாது,
நள்ளி
நட்டோ ர் உவப்ப, நடைப் பரிகாரம்
முட்டாது கொடுத்த, முனை விளங்கு தடக் கை, 105
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங் கோட்டு
நளி மலை நாடன், நள்ளியும்; நளி சினை
ஓரி
நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்துக்
குறும் பொறை, நல் நாடு கோடியர்க்கு ஈந்த,
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த 110
ஓரிக் குதிரை, ஓரியும்; என ஆங்கு,
நல்லியக்கோடனின் தலைமைச் சிறப்பு
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்
எழுவர் பூண்ட ஈகைச் செந் நுகம்,
விரி கடல் வேலி வியலகம் விளங்க,
ஒரு தான் தாங்கிய உரனுடை நோன் தாள் 115
நறு வீ நாகமும் அகிலும் ஆரமும்
துறை ஆடு மகளிர்க்குத் தோள் புணை ஆகிய
பொரு புனல் தரூஉம், போக்கு அரு மரபின்,
தொல் மா இலங்கைக் கருவொடு பெயரிய
நல் மா இலங்கை மன்னர் உள்ளும், 120
மறு இன்றி விளங்கிய வடு இல் வாய் வாள்,
உறு புலித் துப்பின், ஓவியர் பெருமகன்
களிற்றுத் தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி,
பிடிக் கணம் சிதறும் பெயல் மழைத் தடக் கை,
பல் இயக் கோடியர் புரவலன் பேர் இசை 125
நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு,
புரவலனிடம் பரிசுபெறச் சென்ற விதம்
தாங்கு அரு மரபின் தன்னும், தந்தை
வான் பொரு நெடு வரை வளனும், பாடி,
முன் நாள் சென்றனம் ஆக
வருத்தம் போக்கிய வண்மைச் சிறப்பு
இந் நாள்,
திறவாக் கண்ண சாய் செவிக் குருளை 130
கறவாப் பான் முலை கவர்தல் நோனாது,
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ் சோர், முது சுவர்க் கணச் சிதல் அரித்த,
பூழி பூத்த புழல் காளாம்பி:
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல், 135
வளைக் கை, கிணை மகள் வள் உகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பு இலி வெந்ததை,
மடவோர் காட்சி நாணி, கடை அடைத்து,
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்
அழி பசி வருத்தம் வீட; பொழி கவுள், 140
தறுகண் பூட்கை, தயங்கு மணி மருங்கில்,
சிறு கண் யானையொடு பெருந் தேர் எய்தி;
யாம் அவண் நின்றும் வருதும்
எயிற்பட்டினத்தில் கிடைக்கும் பொருள்கள்
நீயிரும்,
இவண் நயந்து இருந்த இரும்பேர் ஒக்கல்
செம்மல் உள்ளமொடு. செல்குவிர்ஆயின், 145
அலை நீர்த் தாழை அன்னம் பூப்பவும்,
தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்,
கடுஞ்சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும்,
நெடுங் கால் புன்னை நித்திலம் வைப்பவும்,
கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர, 150
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி,
மணி நீர் வைப்பு, மதிலொடு பெயரிய,
பனி நீர்ப் படுவின், பட்டினம் படரின்
ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன
வீங்குதிரை கொணர்ந்த விரை மர விறகின் 155
கரும் புகைச் செந் தீ மாட்டி, பெருந் தோள்,
மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து,
நுதி வேல் நோக்கின், நுளைமகள் அரித்த
பழம் படு தேறல் பரதவர் மடுப்ப,
கிளை மலர்ப் படப்பைக் கிடங்கில் கோமான், 160
தளை அவிழ் தெரியல் தகையோற் பாடி,
அறல் குழல் பாணி தூங்கியவரொடு,
வறல் குழல் சூட்டின், வயின் வயின் பெறுகுவிர்:
வேலூர் வளமும் எயினர் விருந்தும்
பைந் நனை அவரை பவழம் கோப்பவும்,
கரு நனைக் காயாக் கண மயில் அவிழவும், 165
கொழுங் கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும்,
செழுங் குலைக் காந்தள் கை விரல் பூப்பவும்,
கொல்லை நெடு வழிக் கோபம் ஊரவும்,
முல்லை சான்ற முல்லை அம் புறவின்,
விடர் கால் அருவி வியன் மலை மூழ்கிச் 170
சுடர் கான் மாறிய செவ்வி நோக்கி,
திறல் வேல் நுதியின் பூத்த கேணி,
விறல் வேல் வென்றி, வேலூர் எய்தின்
உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை
எயிற்றியர் அட்ட இன் புளி வெஞ் சோறு, 175
தேமா மேனிச் சில் வளை ஆயமொடு
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகவிர்,
ஆமூர் வளமும் உழவர் விருந்தும்
நறும் பூங் கோதை தொடுத்த நாள் சினைக்
குறுங் கால் காஞ்சிக் கொம்பர் ஏறி,
நிலை அருங் குட்டம் நோக்கி, நெடிது இருந்து, 180
புலவுக் கயல் எடுத்த பொன் வாய் மணிச் சிரல்
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை,
முள் அரைத் தாமரை முகிழ் விரி நாள்போது
கொங்கு கவர் நீலச் செங் கண் சேவல்
மதி சேர் அரவின் மானத் தோன்றும் 185
மருதம் சான்ற மருதத் தண் பணை,
அந்தணர், அருகா, அருங் கடி வியல் நகர்,
அம் தண் கிடங்கின், அவன் ஆமூர் எய்தின்
வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின்
உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை, 190
பிடிக்கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்துத்
தொடிக்கை மகடூஉ, மகமுறை தடுப்ப,
இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு,
கவைத் தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர். 195
நல்லியக் கோடனின் மூதூர் அண்மையது என்று அறிவித்தல்
எரி மறிந்தன்ன நாவின், இலங்கு எயிற்று,
கரு மறிக் காதின், கவை அடிப் பேய்மகள்
நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல,
பிணன் உகைத்துச் சிவந்த பேர் உகிர், பணைத் தாள்,
அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப, 200
நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர்
சேய்த்தும் அன்று; சிறிது நணியதுவே.
வாயிலின் சிறப்பு
பொருநர்க்கு ஆயினும், புலவர்க்கு ஆயினும்,
அருமறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்,
கடவுள் மால் வரை கண் விடுத்தன்ன, 205
அடையா வாயில் அவன் அருங் கடை குறுகி
நல்லியக்கோடன் அவையில் வீற்றிருக்கும் காட்சி
அவன் குணங்களும் அவற்றை ஏத்துவோரும்
செய்ந்நன்றி அறிதலும், சிற்றினம் இன்மையும்,
இன் முகம் உடைமையும், இனியன் ஆதலும்,
செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த;
அஞ்சினர்க்கு அளித்தலும், வெஞ் சினம் இன்மையும், 210
ஆண் அணி புகுதலும், அழிபடை தாங்கலும்,
வாள் மீக் கூற்றத்து வயவர் ஏத்த;
கருதியது முடித்தலும், காமுறப் படுதலும்,
ஒரு வழிப் படாமையும், ஓடியது உணர்தலும்,
அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த; 215
அறிவு மடம் படுதலும், அறிவு நன்கு உடைமையும்,
வரிசை அறிதலும், வரையாது கொடுத்தலும்,
பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த;
பல் மீன் நடுவண் பால் மதி போல,
இன் நகை ஆயமொடு இருந்தோற் குறுகி 220
யாழ் வாசித்து, அரசனைப் புகழ்ந்து பாடுதல்
பைங் கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன,
அம் கோட்டுச் செறிந்த அவிழ்ந்து வீங்கு திலவின்;
மணி நிரைத்தன்ன வனப்பின்; வாய் அமைத்து,
வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து,
கானக் குமிழின் கனி நிறம் கடுப்ப, 225
புகழ் வினைப் பொலிந்த பச்சையொடு; தேம் பெய்து,
அமிழ்து பொதிந்து இலிற்றும், அடங்கு புரி நரம்பின்;
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்விக்
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக,
நூல் நெறி மரபின். பண்ணி, ஆனாது, 230
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்,
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்
நீ சில மொழியா அளவை
பாணர் முதலியோர்க்கு அவன் உண்டி முதலியன கொடுத்தல்
மாசு இல், 235
காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ,
பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி,
கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப்
பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்,
பனிவரை மார்பன், பயந்த நுண் பொருள் 240
பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில்,
வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி,
ஆனா விருப்பின், தான் நின்று ஊட்டி, 245
நல்லியக்கோடன் அளிக்கும் பரிசில்
திறல் சால் வென்றியொடு தெவ்வுப் புலம் அகற்றி,
விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி,
நயவர், பாணர், புன்கண் தீர்த்தபின்,
வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு;
பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி 250
உருவ வான் மதி ஊர்கொண்டாங்கு,
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு
ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு,
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடுஞ் சினைத்
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல, 255
உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வை,
கருந் தொழில் வினைஞர் கைவினை முற்றி,
ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடைப் பாகரொடு;
மா செலவு ஒழிக்கும் மதனுடை நோன் தாள்
வாள் முகப் பாண்டில் வலவனொடு; தரீஇ, 260
அன்றே விடுக்கும், அவன் பரிசில்
நல்லியக்கோடனது புகழும் பண்பும்
மென் தோள்,
துகில் அணி அல்குல், துளங்கு இயல் மகளிர்
அகில் உண விரித்த அம் மென் கூந்தலின்,
மணி மயில் கலாபம் மஞ்சு இடைப் பரப்பி,
துணி மழை தவழும் துயல் கழை நெடுங் கோட்டு, 265
எறிந்து உரும் இறந்த ஏற்று அருஞ் சென்னி,
குறிஞ்சிக் கோமான், கொய் தளிர்க் கண்ணி,
செல் இசை நிலைஇய பண்பின்,
நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே.
தனிப் பாடல்கள்
அணி இழையார்க்கு ஆர் அணங்கு ஆகி, மற்று அந் நோய்
தணி மருந்தும் தாமே ஆம் என்ப-மணி மிடை பூண்
இம்மென் முழவின் எயிற்பட்டின நாடன்
செம்மல் சிலை பொருத தோள். 1
நெடு வரைச் சந்தனம் நெஞ்சம் குளிர்ப்பப்
படும், அடும் பாம்பு ஏர் மருங்குல்-இடு கொடி
ஓடிய மார்பன் உயர் நல்லியக்கோடன்
சூடிய கண்ணி சுடும். 2

பத்துப்பாட்டு நூல்கள் - பொருநர் ஆற்றுப்படை

சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடிய பொருநர் ஆற்றுப்படை

இது கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது. இந் நூல் பரிசில் பெற்ற பொருநன், பரிசில் பெற விழையும் பொருநனை ஆற்றுப் படுத்தியதாக அமைந்துள்ளது.


பொருநனை விளித்தல்
அறாஅ யாணர் அகன் தலைப் பேர் ஊர்,
சாறு கழி வழி நாள். சோறு நசை உறாது,
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந!
பாலையாழின் அமைப்பு
குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல்;
விளக்கு அழல் உருவின் விசி உறு பச்சை, 5
எய்யா இளஞ் சூல் செய்யோள் அவ் வயிற்று
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல,
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை;
அளை வாழ் அலவன் கண் கண்டன்ன,
துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி; 10
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி,
அண் நா இல்லா அமை வரு வறு வாய்;
பாம்பு அணந்தன்ன ஓங்கு இரு மருப்பின்;
மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும்;
கண்கூடு இருக்கைத் திண் பிணித் திவவின்; 15
ஆய் தினையரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்
கேள்வி போகிய நீள் விசித் தொடையல்;
மணம் கமழ் மாதரை மண்ணியன்ன,
அணங்கு மெய்ந் நின்ற அமை வரு, காட்சி; 20
ஆறு அலை கள்வர் படை விட அருளின்
மாறு தலை பெயர்க்கும் மருவு இன் பாலை
யாழை மீட்டிப் பாடுதல்
வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்,
சீருடை நன் மொழி நீரொடு சிதறி
பாடினியின் கேசாதிபாத வருணனை
அறல் போல் கூந்தல், பிறை போல் திரு நுதல், 25
கொலை வில் புருவத்து, கொழுங் கடை மழைக் கண்,
இலவு இதழ் புரையும் இன் மொழித் துவர் வாய்,
பல உறு முத்தின் பழி தீர் வெண் பல்,
மயிர் குறை கருவி மாண் கடை அன்ன
பூங் குழை ஊசற் பொறை சால் காதின், 30
நாண் அடச் சாய்ந்த நலம் கிளர் எருத்தின்,
ஆடு அமைப் பணைத் தோள், அரி மயிர் முன்கை,
நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல்,
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர்,
அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து, 35
ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை,
நீர்ப் பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ்,
உண்டு என உணரா உயவும் நடுவின்,
வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல்,
இரும் பிடித் தடக் கையின் செறிந்து திரள் குறங்கின், 40
பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப
வருந்து நாய் நாவின், பெருந் தகு சீறடி,
அரக்கு உருக்கு அன்ன செந் நிலன் ஒதுங்கலின்,
பரல் பகை உழந்த நோயொடு சிவணி,
மரல் பழுத்தன்ன மறுகு நீர் மொக்குள் 45
நன் பகல் அந்தி நடை இடை விலங்கலின்,
பெடை மயில் உருவின், பெருந் தகு பாடினி
காடுறை தெய்வத்திற்குக் கடன் கழித்தல்
பாடின பாணிக்கு ஏற்ப, நாள்தொறும்
களிறு வழங்கு அதர கானத்து அல்கி,
இலை இல் மராஅத்த, எவ்வம் தாங்கி, 50
வலை வலந்தன்ன மென் நிழல் மருங்கில்,
காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றைப்
பரிசு பெற்றோன் பெறாதொனை விளித்தல்
பீடு கெழு திருவின், பெரும் பெயர், நோன் தாள்,
முரசு முழுங்கு தானை, மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போலப் 55
பாடல் பற்றிய பயனுடை எழாஅல்
கோடியர் தலைவ! கொண்டது அறிந!
அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது,
ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே;
பரிசு பெற்றோன் பாடின முறை
போற்றிக் கேண்மதி, புகழ் மேம்படுந! 60
ஆடு பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடு
நீடு பசி ஒராஅல் வேண்டின், நீடு இன்று
எழுமதி; வாழி, ஏழின் கிழவ!
பழுமரம் உள்ளிய பறவையின், யானும், அவன்
இழுமென் சும்மை இடனுடை வரைப்பின், 65
நசையுநர்த் தடையா நன் பெரு வாயில்
இசையேன் புக்கு, என் இடும்பை தீர,
எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகி,
பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப,
கைக் கசடு இருந்த என் கண் அகன் தடாரி 70
இரு சீர்ப் பாணிக்கு ஏற்ப, விரி கதிர்
வெள்ளி முளைத்த நள் இருள் விடியல்,
ஒன்று யான் பெட்டா அளவையின்
அரசன் விருந்தோம்பலின் சிறப்பு
ஒன்றிய
கேளிர் போல, கேள் கொளல் வேண்டி,
வேளாண் வாயில் வேட்பக் கூறி, 75
கண்ணில் காண நண்ணு வழி இரீஇ,
பருகு அன்ன அருகா நோக்கமோடு,
உருகுபவை போல் என்பு, குளிர் கொளீஇ,
ஈரும் பேனும் இருந்து இறைகூடி,
வேரொடு நனைந்து, வேற்று இழை நுழைந்த 80
துன்னல் சிதாஅர் துவர நீக்கி,
நோக்கு நுழைகல்லா நுண்மைய, பூக் கனிந்து
அரவு உரி அன்ன, அறுவை நல்கி,
மழை என மருளும் மகிழ் செய் மாடத்து,
இழை அணி வனப்பின் இன் நகை மகளிர், 85
போக்கு இல் பொலங் கலம் நிறைய, பல் கால்,
வாக்குபு தரத்தர, வருத்தம் வீட,
ஆர உண்டு, பேர் அஞர் போக்கி,
செருக்கொடு நின்ற காலை,
இரவில் சுற்றத்துடன் கவலையின்றித் தூங்கி எழுதல்
மற்று அவன்
திருக் கிளர் கோயில் ஒரு சிறைத் தங்கி, 90
தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது
அதன் பயன் எய்திய அளவை மான,
ஆறு செல் வருத்தம் அகல நீக்கி,
அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும்
மனம் கவல்பு இன்றி, மாழாந்து எழுந்து, 95
காலையில் அரசவைக்குச் செல்லுதல்
மாலை அன்னது ஓர் புன்மையும், காலைக்
கண்டோ ர் மருளும் வண்டு சூழ் நிலையும்,
கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப,
வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப,
கல்லா இளைஞர் சொல்லிக் காட்ட, 100
அரசனை அணுகுதல்
கதுமெனக் கரைந்து, 'வம்' எனக் கூஉய்,
அதன் முறை கழிப்பிய பின்றை, பதன் அறிந்து,
உணவு கொடுத்து ஓம்பிய முறை
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்
பராஅரை வேவை 'பருகு' எனத் தண்டி,
காழின் சுட்ட கோழ் ஊன் கொழுங் குறை 105
ஊழின் ஊழின் வாய் வெய்து ஒற்றி,
அவைஅவை முனிகுவம் எனினே, சுவைய
வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ,
மண் அமை முழவின் பண் அமை சீறியாழ்
ஒண் நுதல் விறலியர் பாணி தூங்க, 110
மகிழ்ப் பதம் பல் நாள் கழிப்பி, ஒரு நாள்,
'அவிழ்ப் பதம் கொள்க' என்று இரப்ப, முகிழ்த் தகை
முரவை போகிய முரியா அரிசி
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்,
பரல் வறைக் கருனை, காடியின் மிதப்ப 115
அயின்ற காலை, பயின்று இனிது இருந்து,
கொல்லை உழு கொழு ஏய்ப்ப, பல்லே
எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி,
உயிர்ப்பிடம் பெறாஅது, ஊண் முனிந்து,
ஊருக்குச் செல்லப் பரிசிலன் விரும்புதல்
ஒரு நாள்,
'செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய 120
செல்வ! சேறும், எம் தொல் பதிப் பெயர்ந்து' என.
மெல்லெனக் கிளந்தனம் ஆக,
அரசன் பிரிய மனமின்றிப் பரிசு வழங்கி அனுப்புதல்
'வல்லே
அகறிரோ எம் ஆயம் விட்டு?' என,
சிரறியவன்போல் செயிர்த்த நோக்கமொடு,
'துடி அடி அன்ன தூங்கு நடைக் குழவியொடு 125
பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க!' என,
தன் அறி அளவையின் தரத்தர, யானும்
என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு,
இன்மை தீர வந்தனென்.
கரிகால் வளவனது சிறப்புக்கள்
வென் வேல்
உருவப் பல் தேர் இளையோன் சிறுவன், 130
முருகற் சீற்றத்து உரு கெழு குருசில்,
தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி,
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்ப,
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப,
பவ்வ மீமிசைப் பகற் கதிர் பரப்பி, 135
வெவ் வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு,
பிறந்து தவழ் கற்றதன் தொட்டு, சிறந்த நன்
நாடு செகிற்கொண்டு நாள்தொறும் வளர்ப்ப,
வெண்ணிப் போர் வெற்றி
ஆளி நல் மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி 140
முலைக் கோள் விடாஅ மாத்திரை, ஞெரேரென,
தலைக்கோள் வேட்டம் களிறு அட்டாங்கு,
இரும் பனம் போந்தைத் தோடும், கருஞ் சினை
அர வாய் வேம்பின் அம் குழைத் தெரியலும்,
ஓங்கு இருஞ் சென்னி மேம்பட மிலைந்த 145
இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய,
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன் தாள்,
கண் ஆர் கண்ணி, கரிகால் வளவன்
தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகித்
தொழுது முன் நிற்குவிர் ஆயின்,
கரிகாலனது கொடையின் சிறப்பு
பழுது இன்று, 150
ஈற்று ஆ விருப்பின, போற்றுபு நோக்கி, நும்
கையது கேளா அளவை, ஒய்யென,
பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னல் சிதாஅர் நீக்கி, தூய
கொட்டைக் கரைய பட்டு உடை நல்கி, 155
'பெறல் அருங் கலத்தில் பெட்டாங்கு உண்க' என,
பூக் கமழ் தேறல் வாக்குபு தரத்தர,
வைகல் வைகல் கை கவி பருகி,
எரி அகைந்தன்ன ஏடு இல் தாமரை
சுரி இரும் பித்தை பொலியச் சூட்டி, 160
நூலின் வலவா நுணங்கு அரில் மாலை
வால் ஒளி முத்தமொடு பாடினி அணிய,
கோட்டின் செய்த கொடுஞ்சி நெடுந் தேர்
ஊட்டு உளை துயல்வர, ஓரி நுடங்க,
பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி, 165
காலின் ஏழ் அடிப் பின் சென்று, 'கேலின்
தாறு களைந்து, ஏறு' என்று ஏற்றி, வீறு பெறு
பேர் யாழ் முறையுளிக் கழிப்பி, நீர் வாய்த்
தண் பணை தழீஇய தளரா இருக்கை
நன் பல் ஊர நாட்டொடு, நன் பல், 170
வெரூஉப் பறை நுவலும், பரூஉப் பெருந் தடக் கை,
வெருவரு செலவின், வெகுளி வேழம்
தரவிடைத் தங்கல் ஓவிலனே: வரவிடைப்
பெற்றவை பிறர்பிறர்க்கு ஆர்த்தி, தெற்றென,
செலவு கடைக்கூட்டுதிர் ஆயின், பல புலந்து, 175
நில்லா உலகத்து நிலைமை தூக்கி,
'செல்க' என விடுக்குவன் அல்லன்
சோழ நாட்டின் வளமும் வனப்பும்
ஒல்லெனத்
திரை பிறழிய இரும் பெளவத்துக்
கரை சூழ்ந்த அகன் கிடக்கை,
மா மாவின் வயின் வயின் நெல், 180
தாழ் தாழைத் தண் தண்டலை,
கூடு கெழீஇய, குடிவயினான்,
செஞ் சோற்ற பலி மாந்திய
கருங் காக்கை கவவு முனையின்,
மனை நொச்சி நிழல் ஆங்கண், 185
ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவம்;
இளையோர் வண்டல் அயரவும்; முதியோர்
அவை புகு பொழுதில் தம் பகை முரண் செலவும்
முடக் காஞ்சிச் செம் மருதின்,
மடக் கண்ண மயில் ஆல, 190
பைம் பாகற் பழம், துணரிய
செஞ் சுளைய கனி, மாந்தி;
அறைக் கரும்பின் அரி நெல்லின்
இனக் களமர் இசை பெருக,
வறள் அடும்பின் இவர் பகன்றைத் 195
தளிர்ப் புன்கின் தாழ் காவின்
நனை ஞாழலொடு மரம் குழீஇய
அவண் முனையின், அகன்று மாறி,
அவிழ் தளவின் அகன் தோன்றி,
நகு முல்லை, உகு தேறு வீ, 200
பொன் கொன்றை, மணிக் காயா,
நல் புறவின் நடை முனையின்,
சுற வழங்கும் இரும் பெளவத்து
இறவு அருந்திய இன நாரை
பூம் புன்னைச் சினைச் சேப்பின், 205
ஓங்கு திரை ஒலி வெரீஇ,
தீம் பெண்ணை மடல் சேப்பவும்;
கோள் தெங்கின், குலை வாழை,
கொழுங் காந்தள், மலர் நாகத்து,
துடிக் குடிஞை, குடிப் பாக்கத்து, 210
யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப,
கலவம் விரித்த மட மஞ்ஞை
நிலவு எக்கர்ப் பல பெயர்;
நில மயக்கமும் நல் ஆட்சியும்
தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர்
மீன் நெய்யொடு நறவு மறுகவும்; 215
தீங் கரும்போடு அவல் வகுத்தோர்
மான் குறையொடு மது மறுகவும்;
குறிஞ்சி பரதவர் பாட, நெய்தல்
நறும் பூங் கண்ணி குறவர் சூட;
கானவர் மருதம் பாட, அகவர் 220
நீல் நிற முல்லைப் பல் திணை நுவல;
கானக் கோழி கதிர் குத்த,
மனைக் கோழி தினைக் கவர;
வரை மந்தி கழி மூழ்க,
கழி நாரை வரை இறுப்ப; 225
தண் வைப்பின் நால் நாடு குழீஇ,
மண் மருங்கினான் மறு இன்றி,
ஒரு குடையான் ஒன்று கூற,
பெரிது ஆண்ட பெருங் கேண்மை,
அறனொடு புணரந்த திறன் அறி செங்கோல், 230
அன்னோன் வாழி, வென் வேல் குருசில்!
காவிரியின் வெள்ளச் சிறப்பு
மன்னர் நடுங்கத் தோன்றி, பல் மாண்
எல்லை தருநன் பல் கதிர் பரப்பி,
குல்லை கரியவும், கோடு எரி நைப்பவும்,
அருவி மா மலை நிழத்தவும், மற்று அக் 235
கருவி வானம் கடற்கோள் மறப்பவும்,
பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும்
நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்,
துறைதுறைதோறும், பொறை உயர்த்து ஒழுகி,
காவிரி நாட்டு வயல் வளம்
நுரைத் தலைக்குரைப் புனல் வரைப்பு அகம் புகுதொறும், 240
புனல் ஆடு மகளிர் கதுமெனக் குடைய
கூனி, குயத்தின் வாய் நெல் அரிந்து,
சூடு கோடாகப் பிறக்கி, நாள்தொறும்,
குன்று எனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந் தெற்று மூடையின் இடம் கெடக் கிடக்கும், 245
சாலி நெல்லின், சிறை கொள் வேலி,
ஆயிரம் விளையுட்டு ஆக,
காவிரி புரக்கும் நாடு கிழவோனே.
தனிப் பாடல்கள்
ஏரியும், ஏற்றத் தினானும், பிறர் நாட்டு
வாரி சுரக்கும் வளன் எல்லாம் - தேரின்,
அரிகாலின் கீழ் கூஉம் அந் நெல்லே சாலும்
கரிகாலன் காவிரி சூழ் நாடு. 1
அரிமா சுமந்த அமளி மேலானைத்
திருமாவளவன் எனத் தேறேன்; -திரு மார்பின்
மான மால் என்றே தொழுதேன்; தொழுத கைப்
போனவா பெய்த வளை! 2
முச் சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால்
இச் சக்கரமே அளந்ததால்-செய்ச் செய்
அரிகால்மேல் தேன் தொடுக்கும் ஆய் புனல் நீர்நாடன்
கரிகாலன் கால் நெருப்பு உற்று. 3